47. கங்கையும், ராமர் சேதுவும்.
குமரிக் கண்டம் எனப்படும் தென்னன் தேசங்கள்
தமிழனது தொன்மையை 10,000 ஆண்டுகளுக்கும் மேல் காட்டுகிறது
என்பதைக் கடந்த சில கட்டுரைகள் மூலம் தெரிந்து கொண்டோம்.
தமிழ் மக்கள் ஒவ்வொரு ஊழியின் போதும்
கடல் கோளிலிருந்து தப்பி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர்.
3500 ஆண்டுகளுக்கு முன் நடந்த 3- ஆம் ஊழியின் போது
தற்போதைய தமிழ் நாட்டுக்குப் பெயர்ந்திருக்கின்றனர்.
ஆனால் ஸ்ரீமத் பாகவதம் சொல்வதைப்போல (பகுதி 38)
திராவிட நாட்டுப் பகுதியிலிருந்து வெள்ளத்திலிருந்து தப்பி
வடக்குக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை.
இதிலிருந்து தமிழ் நாட்டு மக்கள்
வட இந்தியாவுக்கோ,
சிந்து சமவெளிப் பகுதிக்கோ இடம் பெயரவில்லை என்பது தெளிவாகிறது.
அவர்கள் ‘சிவனே’ என்று,
தென்னாட்டுடைய சிவனைப் பணிந்து
தென்னன் தேசங்களில்தான் இருந்திருக்கிறார்கள்.